நீலகிரி மாவட்டம் கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் ஜெயலலிதா தான் செய்த முதலீட்டை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளார் என்றும், அதனால் சட்டப் பேரவை உறுப்பினர் பதவி இழப்பார் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்!
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, கொடநாடு தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் முதலீடு கணக்கில் 01.04.2005 அன்று ஜெயலலிதாவின் பெயரில் ஆரம்ப முதலீட்டுத் தொகையாக ரூபாய் 1 கோடியே 80 லட்சமும், 31.03.2006 அன்று இறுதி முதலீட்டுத் தொகை ரூபாய் 1 கோடியே 80 லட்சமாக இருந்துள்ளது தான் வெளியிட்ட ஆதாரப்பூர்வமான தகவல் என்றும், இந்தக் கணக்கை 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது வேட்பு மனு தாக்கல் செய்த நேரத்தில் ஜெயலலிதா குறிப்பிடாமல் மறைத்துள்ளார் என்றும் கூறினார்.
"இது உண்மை என நிரூபிக்கப்பட்டால் ஜெயலலிதா எதிர்காலத்தில் தேர்தலில் நிற்கவும் முடியாது, ஏற்கனவே அவர் வெற்றிபெற்றிருப்பதும் செல்லாது" என்று கருணாநிதி கூறினார்.
இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வீர்களா என்று கேட்டதற்கு, அது குறித்து யோசிக்கப்படும் என்று கருணாநிதி பதிலளித்தார்.