கரை திரும்பிய மீனவர்கள் முதல்வருடன் சந்திப்பு

காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்கள் 11 பேர் நேற்று கரை திரும்பிய நிலையில் இன்று அவர்கள் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் 7 ந் தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் 11 பேரும் கேரளாவை சேர்ந்த ஒருவரும் கரை திரும்ப வில்லை. இவர்களை கடல் புலிகள் கடத்தி அவர்கள் முகாமில் சிறைவைத்திருப்பதாக தமிழக காவல் துறையும் மத்திய அரசும் தெரிவித்தன.

காணாமல் போன மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார். மேலும் மீனவர்களது குடும்பத்தினருக்கு மாதம் ரூ 1500 உதவி தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் காணாமல் போன மீனவர்கள் நேற்று இரவு இரு படகுகளில் இராமேஸ்வரம் வந்தனர். அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு கரை சேர்த்தனர்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து தாங்கள் மீட்கப்பட்டதற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். மீனவர்களின் முதல் உதவிக்காக ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் வழங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்