உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மாற்றங்கள்

வியாழன், 21 பிப்ரவரி 2008 (10:43 IST)
2010 - 11 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆசியாவில் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியை நடத்தும் விதிமுறைகளில் பல மாற்றங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமைச் செயற்குழு பரிந்துரை செய்துள்ளது.

அதாவது மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 2007 உலகக் கோப்பை போட்டிகள் 47 நாட்களுக்கு நடைபெற்றது, 16 அணிகள் பங்கு பெற்றன. ஆனால் 2010- 11 உலகக் கோப்பை போட்டிகள் 38 நாட்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. பங்கு பெறும் அணிகளும் 16லிருந்து 14 ஆக குறைக்கப்படுகிறது.

14 அணிகளும் 7 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதில் நடைபெறும் ஆட்டங்களில் இரண்டு பிரிவுகளிலிருந்தும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் கட்டத்திற்கு செல்லும்.

இதில் காலிறுதி, அரையிறுதி பிறகு இறுதிப் போட்டி என்று ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த உலகக் கோப்பையில் இருந்தது போல் சூப்பர் 8 முறை வரும் உலகக் கோப்பையில் இல்லை.

இந்த புதிய வடிவமைப்பில் கடந்த முறை நடந்தது போல் முதன்மை அணிகள் கீழ் நிலையில் உள்ள அணிகளிடம் ஒரே முறை தோற்பதால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் போகும் நிலை ஏற்படாது.

மேலும் வரும் உலகக் கோப்பை போட்டியில் நடுவர் தீர்ப்பு மறுபரீசிலனை முறையை ஐ.சி.சி. அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த முறைக்கான பரிசோதனை முயற்சிக்காக இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் ஜூலை மாதம் லார்ட்சில் நடைபெறும் டெஸ்ட் போட்டி பயன்படுத்தப்படும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

இந்த பரிந்துரைகளை ஐ.சி.சி வாரியம் வரும் மார்ச் 18ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விவாதித்து முடிவுகளை தெரிவிக்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்