மானவ்ஜித் சிங்கிற்கு கேல்ரத்னா விருது

Webdunia

வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 (10:25 IST)
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கேல்ரத்னா விருதிற்கு துப்பாக்கி சுடுதல் வீரர் மானவ்ஜித்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை மத்திய அரசு ஆண்டுதோறும் தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.

இதன்படி இந்த ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருது, தயான்சந்த், துரோணாச்சாரியா விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இதில் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதிற்கு 30 வயதான துப்பாக்கி சுடும் வீரர் மானவ்ஜித்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருதுக்கான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டிராவிட், டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி உள்பட மொத்தம் 8 பேரை வீழ்த்தி மானவ்ஜித் சிங் இந்த விருதிற்கு தேர்வாகியுள்ளார்.

மானவ்ஜித்சிங் 2006-ம் ஆண்டு குரோஷியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். இதே போல் மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறார். கேல்ரத்னா விருது பெறும் 4-வது துப்பாக்கி சுடும் வீரர் மானவ்ஜித்சிங் என்பது குறிப்பிடத்தப்பது. இந்த விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் கிடைக்கும்.

அர்ஜுனா விருது பெறும் வீரர்கள் : ஹரிகிருஷ்ணா (செஸ்), பினு (தடகளம்), விஜேந்தர் (குத்துச்சண்டை), அஞ்சும் சோப்ரா (பெண்கள் கிரிக்கெட்), சுனிதா குல்லு (பெண்கள் ஹாக்கி), சேத்தன் ஆனந்த் (பேட்மிண்டன்), ஜெயந்தா தலுக்தர் (வில்வித்தை), நவ்நீத் கவுதம் (கபடி), விஜய்குமார் (துப்பாக்கி சுடுதல்), சவுரவ் கோஷல் (ஸ்குவாஷ்), சுபஜித் சாகா (டேபிள் டென்னிஸ்), கீதா ராணி (பெண்கள் பளுதூக்குதல்), கீதிகா ஜாகர் (பெண்கள் மல்யுத்தம்), ரோகித் பாகர் (உடல் ஊனமுற்றோருக்கான போட்டி),

தயான்சந்த் விருது பெறும் வீரர்கள் : வாரிந்தர் சிங் (ஆக்கி), ஷாம்ஷர் சிங் (கபடி), ராஜேந்திர சிங் (மல்யுத்தம்), பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியா விருது:ஆர்.டி.சிங் (தடகளம், பாராஒலிம்பிக்), தாமோதரன் சந்திரலால் (குத்துச்சண்டை), கோனொரு அசோக் (செஸ்).

இவர்களுக்கான விருதுகளை வரும் 29-ந்தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் வழங்குவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்