நிலநடுக்கம்: சிக்கிமில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு

புதன், 21 செப்டம்பர் 2011 (17:36 IST)
கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சிக்கிம் மாநிலத்தில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

தலைநகர் கேங்டாக்கில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முடிவடைந்துவிடும் என்றார்.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் சுமார் 1 லட்சம் ரூபாய் அளவுக்கு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது தொடர்பான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, நிதியுதவி கோரப்படும் என்றும் அவர் கூறினார்.

நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், நிலநடுக்கத்தினால் சிக்கிம் மாநிலத்தில் மட்டும் 68 பேர் உயிரிழந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்