மோடிக்கு எதிரான கலவர வழக்கு: உச்ச நீதிமன்றம் கை விரிப்பு!
திங்கள், 12 செப்டம்பர் 2011 (14:08 IST)
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிரான குல்பர்க் சொசைட்டி கலவர வழக்கை மேற்கொண்டு தாங்கள் விசாரிப்பதில்லை என்றும், அதனை விசாரணை நீதிமன்றமே விசாரிக்கட்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து கடந்த 2002 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 28 ல் அகமதாபாத்தில் நிகழ்ந்த கலவரத்தில் காங்கிரஸ் எம்.பி. எசன் ஜாப்ரி உள்பட 69 பேர் இறந்தனர்.
இந்த கலவரத்தின் ஒருபகுதியாக குல்பர்கா சொசைட்டியில் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட எசன் ஜாப்ரியின் மனைவி ஸாகியா ஜாப்ரி என்பவர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் வழக்கு நடந்து வந்தது.
2009 ஏப்ரல் 27ல் உச்சநீதிமன்ற சிறப்பு நீதிமன்றம், குல்பர்கா சொசைட்டி படுகொலை விசாரணையில் முன்னேற்றமில்லை என்று கூறி ஸாகியா ஜாப்ரி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், பி. சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோரை கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில்," 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் இனிமேலும் எந்த கண்காணிப்பும் தேவை இல்லை.கலவரத்தை ஒடுக்க நரேந்திரமோடி எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக மோடி மீது எந்த தீர்ப்பும் சொல்லப்பட வேண்டியது இல்லை.
இசன் ஜப்ரி கொலை வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையை மாஜிஸ்திரேட் கீழ் கோர்ட்டிள் தாக்கல் செய்ய வேண்டும். மோடிக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்ள மாஜிஸ்திரேட் நினைத்தால் இசன் ஜப்ரியின் விதவை மனைவியை அழைத்து அவர் கருத்தை கேட்க வேண்டும்.
விசாரணை நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் அறிக்கையின் படி வழங்கப்படும் தீர்ப்புக்குப் பிறகே உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்" என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கலவர வழக்கு தொடர்பான தலைவலி தற்காலிகமாக நீங்கியுள்ளதது.
அதே சமயம் இந்தத் தீர்ப்பு குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ள ஜாப்ரி, சிறப்பு விசாரணைக்குழு முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.