தயாநிதி மாறனை குற்றமற்றவர் என்று கூறவில்லை: ம.பு.க.

வியாழன், 8 செப்டம்பர் 2011 (18:49 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன் குற்றமற்றவர் என்று தாங்கள் ஒருபோதும் கூறவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுக் கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணையை கண்காணித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, “2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றமற்றவர் என்று தயாநிதி மாறனை ஒருபோதும் நாங்கள் கூறிடவில்லை. தனது ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு தன்னை தயாநிதி மாறன் வற்புறுத்தினார் என்று சி.சிவசங்கரன் கூறிய புகாருக்கு ஆதாரமில்லை என்றுதான் கூறியிருந்தோம்” என்று ம.பு.க. சார்பாக வாதிட்ட மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் கூறினார்.

“சிவசங்கரனிடம் இருந்து ஏர்செல் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னர் அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுடனும், அவருடைய சகோதரருடனும் மாக்சிஸ் நிறுவனம் தொடர்பில் இருந்துள்ளது என்பது இதுவரை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றும் கே.கே.வேணுகோபால் கூறியுள்ளார்.

ம.பு.க. தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கை பற்றி தவறான புரிதலும், தவறான ஊடக செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறிய வேணுகோபால், இதன் அடிப்படையில் ம.பு.க. நேர்மையாக செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்