2001ஆம் ஆண்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையை நிறைவேற்றாமல் தாமதிப்பது ஏன் என்று மத்திய அரசை பாரதிய ஜனதா கட்சி வினவியுள்ளது.
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை பேச்சாளர் இரவி சங்கர் பிரசாத், “2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்சல் குருவின் மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அவர் தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவும் 2008இல் நிராகரிக்க்ப்பட்டுவிட்டது.
தண்டனையை நிறைவேற்றாமல் இன்னும் எத்தனை ஆண்டுகள் தாமதிப்பீர்கள்” என்று வினா எழுப்பினார். மரண தண்டனை கைதிகளாக இருந்த தேவிந்தர் சிங் புல்லர், மகேந்திர நாத் தாஸ் ஆகியோரின் கருணை மனுக்களை, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்ட நிலையில், அப்சல் குரு தண்டனை நிறைவேற்றத்திற்கு பா.ஜ.க. அழுத்தம் கொடுத்துள்ளது.
மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை வரிசைப்படி நிறைவேற்ற வேண்டும் என்று எந்தச் சட்டமும் கூறவில்லை என்றும், எத்தனையோ வழக்குகள் இருக்கையில் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கு விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவில்லையா என்று இரவி சங்கர் பிரசாத் வினவினார்.