எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சியை நிதியை நிறுத்துகிறார் நிதீஷ்குமார்
ஞாயிறு, 19 டிசம்பர் 2010 (14:49 IST)
ஊழலை கட்டுப்படுத்தும் விதமாக எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.களுக்கு வழங்கப்படும் தொகுதி வளர்ச்சி நிதியை நிறுத்த பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் முடிவு செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தொகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வழங்கப்படும் நிதியில் முறைகேடுகள் நிகழ்வதால் அவர்களுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்று நிதீஷ்குமார் கூறியுள்ளார்.
இதனிடையே தலைநகர் பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, அமைதியையே தாம் பெரிதும் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக இரயில் நிலையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர், புதிய பயணிகள் இரயில் ஒன்றினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய நிதீஷ்குமார், டிக்கெட் இன்றி பயணம் செய்வதை பயணிகள் தவிர்க்க வேண்டும் என்றும் இரயில்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.