எதிர்க்கட்சியினரின் பலத்த அமளிக்கிடையே 2010 -11 ஆம் நிதியாண்டுக்கான துணைநிதி மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
2 ஜி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 13 நாட்களாக எந்தவித அலுவலும் நடைபெறாமல் முடக்கப்பட்ட நிலையில், மக்களவையில் இன்று துணை நிதி மசோதாவை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
இது எந்தவித விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு 2ஜி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக் கோரி எதிர்கட்சியினர் மேற்கொண்ட அமளி காரணமாக அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபிரணாப் முகர்ஜி, இந்த அமளிக்கிடையில் நிதி மசோதாவை நிறைவேற்றும் வழிமுறையில் எனக்கு மகிழ்ச்சியில்லை என்றார்.
இதேபோல் சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி கொண்டுவந்த நீதித்துறை தொடர்பான மசோதாவும் பலத்த அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்டது.