இந்தியாவில் உலக அணு சக்தி கூட்டாண்மை மையம் அமைக்கப்படும்: பிரதமர்

செவ்வாய், 13 ஏப்ரல் 2010 (21:28 IST)
அணு சக்தி பாதுகாப்புத் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உலக அணு சக்தி கூட்டாண்மை மையத்தை இந்தியா உருவாக்கும் என்று வாஷிங்டனில் நடைபெற்றுவரும் அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அணு சக்தி தொழில்நுட்பத் திறன் கொண்ட 45 நாடுகள் கலந்துகொள்ளும் அணு ஆயுத பாதுகாப்பு மாநாடு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இன்று துவங்கியது.

இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், அணு ஆயுதத்தை உருவாக்க உதவும் தொழில்நுட்பத்தை எந்த ஒரு நாட்டிற்கும் இந்தியா வழங்காது என்று் கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்த உலக அணு சக்தி கூட்டாண்மை மையம் அமைக்கும் முடிவை வரவேற்பதாகக் கூறிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அணுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்த சிறந்த நடைமுறையை உருவாக்கும் என்று கூறினார்.

இந்தியாவில் உருவாக்கப்படும் அணு சக்தி கூட்டாண்மை மையம் தொழில்நுட்ப ரீதியாக மிக நவீனமானதாகவும், பன்னாட்டு அணு சக்தி முகமையின் பார்வையின் கீழ் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் அமைப்பாக செயல்படும் என்றும் மன்மோகன் சிங் கூறினார்.

“இம்மையத்தில் அதி நவீன அணு சக்தி அமைப்பு தொடர்பான ஆய்வு, அணு சக்தி பாதுகாப்பு, கதிர் வீச்சு பாதுகாப்பு, கதிர்வீச்சு தொழில்நுட்பத்தை மருத்துவத்திற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தல் ஆகிய நான்கு பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

இன்றைய உலகிற்கு அணு சக்தி பாதுகாப்பு என்பது பெரும் சவாலாக உள்ளது. எனவே பன்னாட்டு அணு சக்தி முகமையுடனும், ஐ.நா.வின் உறுப்பு நாடுகளுடனும் இணைந்து அணு பயங்கரவாதத்திற்கு எதிரான உலக முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். அணுத் தொழில் நுட்பம் தவறான கைகளுக்கு சென்றுவிடாமல் பாதுகாக்கக் கூடிய பன்னாட்டு அளவிலான கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும்.

அணு சக்தி தொழில் நுட்பம் அணு ஆயுத குவியலிற்கு வழிவகுக்காக வண்ணம் பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் இணைந்து பணியாற்றிவரும் அதே வேளையில், அதற்கான சர்வதேச ஒத்துழைப்பையும் இந்தியா நாடி வருகிறது.

சர்வதேச அணு சக்தி முகமையுடன் இணைந்து இதுவரை 9 அணு சக்தி பாதுகாப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளது. அதோடு இணைந்து பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சமூக ரீதியான அணு மின் சக்தி உலைகளை பன்னாட்டு அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது.

அணுத் தொழில் நுட்பத்தை பெற்றிராத எந்த ஒரு நாட்டிற்கும் அதனை வழங்காத நாடு என்பது மட்டுமின்றி, அதனை முறைபடுத்தும் பேரழிவு ஆயுதங்கள் சட்டத்தையும் இந்தியா நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவின் 3 கட்ட அணு சக்தித் திட்டம் இந்த 60 ஆண்டுக் காலத்தில் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, அணு எரிபொருள் சுழற்சியை முழுமை செய்து அதன் மூலம் பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் மீது முழுமையான கட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது.

அதே நேரத்தில் பாதுகாப்பான அணு உலைகள் உருவாக்கத்திலும், தொழில்நுட்ப மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறது. குறைந்த அளவிற்கு செரிவூட்டப்பட்ட யுரேனியத்தை தோரியத்துடன் கலந்து பயன்படுத்தும் அதி நவீன கடின நீர் அணு உலையை சமீபத்தில் இந்தியா வடிவமைத்துள்ளது. இது பாதுகாப்பானது, அணு ஆயுத பரவலை தடுக்கக் கூடியது” என்று பிரதமர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்