என்.டி.ஏ. ஆட்சியில் ஊழல்: ராசா முன் கூட்டியே வெளியிடாதது ஏன்? - பாஜக
சனி, 31 அக்டோபர் 2009 (14:14 IST)
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் 1.60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியிருந்த குற்றச்சாற்றுக்கு பாஜக பதில் அளித்துள்ளது.
மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்ததாக கூறும் அமைச்சர் ராசா, இதுவரை மவுனமாக இருந்தது ஏன்? என்றும், கடந்த 5 ஆண்டு காலமாக மத்திய அமைச்சராக இருந்தவர் முன் கூட்டியே இந்த குற்றச்சாற்றை வெளியிட்டிருக்கலாமே? என்றும் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியிருக்கிறார்.
இப்போது ராசா குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பதால், பாஜக ஆட்சி மீது குறைகூறி வருவதாக ஜோஷி கூறினார்.
பாஜக ஆட்சியின் போது இலவசமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டதில் அரசுக்கு 1.60 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ராசா நேற்று புகார் கூறியிருந்தார்.
மேலும் பல முன்னணி மொபைல் நிறுவனங்களுக்கு விதிகளை மீறி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கூடுதலாக 4.4 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை ஒதுக்கீடு அளித்ததாகவும் அமைச்சர் குற்றம்சாற்றியிருந்தார்.
முன்னதாக தொலைத்தொடர்பு அமைச்சக அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு ராசாவை பாஜக வலியுறுத்தி வருகிறது.
ஆனால் தாம் பதவி விலகத் தேவையில்லை என்று ராசா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.