ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக நக்ஸலைட்டுகள் அறிவித்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
மக்களவை முன்னாள் அவைத் தலைவர் ரபி ரே உள்ளிட்ட பலர் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான துணை இராணுவப் படைகளின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று விடுத்த அறிக்கைக்கு பதிலளித்துள்ள அமைச்சர் சிதம்பரம், ரபி ரே தலைமை வகிக்கும் அமைதிக்கான குடிமக்கள் முன்முயற்சி (Citizen’s Initiative for Peace) அமைப்பு மாவோயிஸ்ட்டுகளுடன் பேசி, அவர்கள் மேற்கொண்டு வரும் ஆயுதப் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
“மாவோயிஸ்ட்டுகளின் ஆயுதப் போராட்டமே அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தடையாக உள்ளது. அவர்களை ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்துகின்றனர். வன்முறைப் பாதையை கைவிடுவதாக அவர்கள் அறி்க்கை வெளியிட்டால் அவர்களோடு மத்திய மாநில அரசுகள் அவர்கள் எழுப்பும் பிரச்சனைகள் எதுவாயினும் அது குறித்துப் பேசுவதற்கு தயாராகவே இருக்கிறோம்” என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
பொருளாதார இலக்குகளை குறிவைத்து நக்ஸலைட்டுகள் இந்த ஆண்டில் மட்டும் 183 தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இரயில் இருப்புப் பாதைகள், செல்பேசி கோபுரங்கள், மின் பகிர்வுத் திட்டங்கள், சுரங்கங்கள், பஞ்சாயத்து கட்டிடங்கள், பள்ளிக் கட்டிடங்கள் ஆகியவற்றை மாவோயிஸ்ட்டுகள் தகர்த்துள்ளனர் என்று கூறியுள்ள ப. சிதம்பரம், மக்களை பாதிக்கும் பிரச்சனைகளான உணவுப் பாதுகாப்பு, நிலம் மற்றும் வனம் சார்ந்த அவர்களின் உரிமை, கல்வி ஆகியன குறித்து மத்திய அரசு கவலை கொண்டுள்ளது. ஆயினும் அப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஜனநாயக ரீதியிலான நிர்வாகமே சரியான வழியாகும் என்று கூறியுள்ளார்.
“இந்தியாவைப் போன்தொரு பன்முகத் தன்மைகள் கொண்ட நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயக வழியே சிறந்தது, இதில் மாவோயிஸ்ட்டுகள் விதிவிலக்கல்ல” என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.