24 மணி நேரத்தில் 9 பேர் சாவு: பன்றிக்காய்ச்சல் பலி 17 ஆனது

புதன், 12 ஆகஸ்ட் 2009 (20:18 IST)
இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் பரவியது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் இந்நோய் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 3ம் தேதி புனே நகரை சேர்ந்த 13 வயது மாணவி ரிடா ஷேக் உயிரிழந்தார்.

இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு ஏற்பட்ட முதல் பலி இது. இதை தொடர்ந்து பன்றிக்காய்ச்சல் பலிகள் அதிகரிக்க தொடங்கின.

மகாரஷ்டிவில் புனே, மும்பை, குஜராத்தில் வதேதரா மற்றும் தமிழகத்தில் சென்னை ஆகிய நகரங்களில் அடுத்ததடுத்து பலர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகினர்.

இந்நிலையில், நாசிக்கில் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். புனேயில் சூசன் என்ற பெண்ணும், 41 வயதான பாலு குலுன்ட் என்பவரும் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தனர். கேரளாவிலும் ஒருவர் உயிரிழந்தார். 50 வயது பெண் ஒருவரும் இன்று மதியம் புனே மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதுதவிர, புனே நகரில் கடந்த 4 தினங்களாக மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வந்த கவுதம் செலார் (48) என்ற டிரைவர் ஒருவரும் இன்று மாலை உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர்.

புனே மருத்துவமனையில் மேலும் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்