விமான கோளாறு: கேரள முதல்வர், அமைச்சர்கள் உயிர் தப்பினர்
வெள்ளி, 3 ஜூலை 2009 (17:36 IST)
கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், அமைச்சர்கள் கொடியேரி பாலகிருஷ்ணன், என்.கே. பிரேமச்சந்திரன் ஆகியோர் சென்ற விமானத்தின் ஒரு என்ஜின் பழுதானதைத் தொடர்ந்து, அந்த விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.
கொச்சியில் இருந்து இன்று காலை புதுடெல்லி சென்ற ஐ.சி 466 என்ற அந்த விமானத்தில் முதல்வர், அமைச்சர்களுடன் பயணிகளும் இருந்தனர். அந்த விமானத்தின் 2 என்ஜின்களில் ஒன்று நடுவானில் பழுதானதைத் தொடர்ந்து, விமானி அந்த விமானத்தை நாக்பூரில் தரையிறக்கினார்.
இதனால் மிகப்பெரிய விபத்தில் இருந்து அந்த விமானம் தப்பியது.
விமானத்தின் பின்புறமிருந்து கடுமையான சத்தம் வந்ததாகவும், இதையடுத்து அந்த விமானம் தனது திசையை விட்டு இறங்கியதாகவும், இதையடுத்து என்ஜின் பழுதானதாகவும் அமைச்சர் பிரேமசந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சத்தம் வந்ததைத் தொடர்ந்து இருக்கை பெல்ட்-ஐ அணியுமாறு விமானி கேட்டுக் கொண்டதாகவும், இதனால் சற்றே பீதி ஏற்பட்டதாகவும், பின்னர் நாக்பூரில் அவசரமாக தரையிறக்குவதாக விமானி கூறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விமானியும், அவரது குழுவினரும் வெற்றிகரமாக தரையிறக்கும் பணியை மேற்கொண்டதாகவும் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
நாக்பூரில் விமானம் தரையிறக்கப்பட்ட பிறகே ஒரு என்ஜின் இயங்காதது தங்களுக்கு தெரிய வந்ததாகவும் பிரேம சந்திரன் கூறினார்.
அந்த விமானம் முற்றிலும் புதியது என்றும், இது எப்படி நடைபெற்றது எனத் தெரியவில்லை என்றும் விமானி தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நடந்த சம்பவத்திற்காக பயணிகளிடம் விமானி மன்னிப்பு கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நாக்பூரில் காலை 10.30 மணிக்கு வந்தடைந்த அந்த விமானத்திற்குப் பதிலாக வேறு விமானம் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டு அச்சுதானந்தன், அமைச்சர்கள் உட்பட பயணிகள் அனைவரும் தலைநகர் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை பிரதமர் தலைமையில் நடைபெறும் முல்லைப்பெரியார் அணை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சென்ற போது இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.
புதுடெல்லியில் நாளை தொடங்கவிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்திலும் கேரள முதல்வர் அச்சுதானந்தன் பங்கேற்க உள்ளார்.