டெல்லி: காவல்துறையினருக்கு எதிராக கற்பழிப்பு வழக்கு
புதன், 24 ஜூன் 2009 (11:30 IST)
டெல்லியின் தென்மேற்குப் பகுதியில் இந்தர்பூரி காவல்நிலைய அதிகாரி உட்பட 5 காவல்துறையினருக்கு எதிராக கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தர்பூரி காவல்நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்கள், அப்பகுதியைச் சேர்ந்த தேடப்படும் குற்றவாளி குறித்து விசாரணை நடத்துவதற்காக அவரின் மனைவியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் காவல்நிலைய சிறையில் அந்தப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததுடன், காவல்நிலைய அதிகாரி உட்பட 5 பேர் கற்பழித்ததாக அந்தப் பெண் புகார் கூறினார்.
அந்தப் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தின் முன் கூடி, வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து குழு கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்நிலையத்தை சிலர் சூறையாடினார்கள். இதனால் அங்கு சிறிது நேரத்திற்கு பதற்றம் நீடித்தது.
தன்னைக் கற்பழித்தவர்கள் யார்-யார் என்று தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்று அப்பெண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை அடையாளம் காணும் அணிவகுப்பு நடத்தப்படும் என்றும், அந்தப் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் என்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற ஏதுவாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் மகளிர் ஆணையம் இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார்.