ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பது ஏன்: மன்மோகன் விளக்கம்
திங்கள், 15 ஜூன் 2009 (18:18 IST)
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு ரஷ்யா தலைமை ஏற்றிருப்பது, மத்திய ஆசியாவில் உள்ள அண்டை நாடுகளுடன் நமது உறவுகளை வலுப்படுத்த விரும்புவது ஆகிய காரணங்களால் ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்ததாக பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்யா புறப்படுவதற்கு முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கை:
ரஷ்ய அதிபர் திமித்ரி மெட்வேடேவின் அழைப்பின் பேரில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா நாடுகளின் உச்சி மாநாட்டிலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்வதற்காக இன்று ரஷ்யா செல்கிறேன்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் (பிரிக்) மொத்த மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 40 விழுக்காடாகும். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்கு 40 சதவீதமும் கூட. உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் இந்த நாடுகளின் குழுவுக்கு உள்ளது. சொல்லப்போனால் உலகப் பொருளாதாரம் மீண்டு வருவதுகூட இந்த நாடுகளின் பொருளாதார வெற்றியுடன் இணைந்திருக்கிறது.
பிரிக் நாடுகளிலேயே இந்தியாவின் பொருளாதாரம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதுள்ள நிதி மற்றும் பொருளாதார தேக்க நிலையை சமாளிப்பதற்கு சர்வதேச அளவிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க நாம் தயாராக உள்ளோம். சர்வதேச விவகாரங்களில் பல்தரப்பு கோட்பாட்டை மேம்படுத்துவதில் பிரிக் நாடுகளுக்கு பங்குள்ளது. நடப்பு நிகழ்வுகளுக்கு ஏற்ப, ஐக்கிய நாடுகள் அவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்ததை கொண்டுவரச் செய்ய வேண்டும். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில், பிரிக் நாடுகளின் உச்சி மாநாடு முதன் முறையாக தனித்து நடைபெறுவது மிக முக்கியமான ஒன்று.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிலும் முதன் முறையாக பங்கேற்கவுள்ளேன். 2005-ம் ஆண்டிலிருந்து இதில் இந்தியா பார்வையாளராக இருந்து வந்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு ரஷ்யா தலைமை ஏற்றிருப்பது, மத்திய ஆசியாவில் உள்ள அண்டை நாடுகளுடன் நமது உறவுகளை வலுப்படுத்த விரும்புவது ஆகிய காரணங்களால் இந்த மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்தேன். தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதிலும், எரிசக்திப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வளர்ச்சி, வேளாண்மை, போக்குவரத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி ஆகிய துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பதிலும் இருநாடுகளும் நாட்டம் கொண்டுள்ளன.
இந்த பயணத்தின் போது ரஷ்யாவில் உள்ள ஏகட்டரின்பர்க்கிற்கு வருகை தரும் பிற உலகத் தலைவர்களை சந்திக்கவும், கருத்துக்களை பரிமாறவும் ஆர்வமுடன் இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.