வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ.. விழிப்புணர்வு தேவை என கூறும் மருத்துவர்கள்..!

Mahendran

செவ்வாய், 5 நவம்பர் 2024 (10:20 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக மெட்ராஸ் எனப்படும் கண் தொற்று நோய் பரவி வருவதாகவும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை அதிக அளவில் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவர் இளங்கோவேள் தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் ஐ என்பது எளிதில் குணப்படுத்தக்கூடிய சாதாரண தொற்று நோய் என்றாலும், அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் காலம் தாழ்த்தி அலட்சியம் செய்தால் பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்திருத்தல், கண்ணில் நீர் சுரத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அது மெட்ராஸ் ஐ அறிகுறி என்பதை உணர்ந்து, மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்காலத்தில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வருவதைக் காண முடிவதாகவும், இதற்கான விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்