பொருளாதார சீர்திருத்தம், வேலை வாய்ப்பிற்கு முன்னுரிமை: மன்மோகன் சிங்

செவ்வாய், 19 மே 2009 (20:12 IST)
உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை போக்க முதலீட்டிற்கும், வேலை வாய்ப்பிற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், “முதலீட்டிலும், வேலை வாய்ப்பிலும் ஒரு சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் மாற்ற வேண்டும். வளர்ச்சியை மீண்டும் நிலைநிறுத்தி, அதன் பலனை பரவலாக்க வேண்டும்” என்று கூறினார்.

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீரான நிலையில் தொடரச் செய்ய வேண்டுமெனில் புதிய முலதன வரவும், அரசு நிதியை நன்கு பயன்படுத்தக்கூடிய ஆளுமையும் தேவை என்று கூறினார்.
இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கப்போகும் மன்மோகன் சிங், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க பொருளாதார சீர்திருத்தமும், வேளாண்மையை பலப்படுத்தவும், ஊரக மேம்பாட்டை துரிதப்படுத்தவும் வேண்டும் என்று கூறினார்.

உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவு நம்மை வெகுவாக பாதித்துள்ளது. எனவே பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கொள்கைகளை, திட்டங்களை நிறைவேற்ற ஒரு காலவரையுடன் கூடிய இலக்கு ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் நிர்ணயிக்கப்படும் என்றும், ஒவ்வொரு அமைச்சகத்தின் திறனையும் மதிப்பீடு செய்ய காலாண்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்