இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தஹாருக்குக் கடத்தப்பட்ட போது, தீவிரவாதிகள் விடுவிப்பதற்கு அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி எதிர்ப்பு தெரிவித்தார் என்று ஜஸ்வந்த் சிங் கூறியிருப்பதை காங்கிரஸ் குறைகூறியுள்ளது.
தற்போது தேர்தலுக்காக - சந்தர்ப்பதவாத அரசியலுக்காக பாஜக-வின் பிரதமர் வேட்பாளரான அத்வானியை நியாயப்படுத்தும் வகையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறியிருப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களுக்கு அளித்த கூறியிருக்கிறார்.
அத்வானியின் தவறை மூடி மறைக்கும் வகையிலும், அவரை முன்னிலைப்படுத்தும் வகையிலும் ஜஸ்வந்த் சிங் 10 ஆண்டுகளுக்குப் பின் இதுபோன்று கூறுவது ஏற்க முடியாதது என்று அவர் கூறினார்.
தேர்தலுக்கு மத்தியில் இதுபோன்ற அறிவிப்பை ஜ்ஸ்வந்த் சிங் வெளியிடுவதால், வாக்காளர்கள் யாரும் முட்டாளாக மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த 2 பேர், காந்தஹார் சம்பவத்தின் போது தீவிரவாதிகளை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அவர்கள் அத்வானி மற்றும் அருண் ஷோரி என்றும் ஜஸ்வந்த் சிங் டார்ஜிலிங்கில் நேற்று கூறியிருந்தார்.