சிவசங்கர் மேனன், நாராயணன் இன்று இலங்கை பயணம்!

வெள்ளி, 24 ஏப்ரல் 2009 (10:41 IST)
இந்திய அரசின் சிறப்பு தூதர்களான வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அகியோர் இன்று இலங்கை செல்கின்றனர்.

இலங்கை நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று இரண்டாவது நாளாக டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்துக்கு பின்னர் அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக, இந்திய அரசின் சிறப்பு தூதர்களாக வெளியுறவு அமைச்சக செயலாளர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இருவரும் 24ம் தேதி (இன்று) இலங்கை செல்கின்றனர். அவர்கள் இருவரும், இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்து போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க உள்ளனர்" என்றார்.

இதற்கிடையே, இலங்கையில் உள்ள இந்திய தூதர் அலோக் பிரசாத் டெல்லி வந்துள்ளார். அவர் நேற்று அயலுறவுத்துறை அமைச்சர் மந்திரி பிரணாப் முகர்ஜி, அயலுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, இலங்கையில் போர் நடைபெறும் பகுதியில் தற்போதைய நிலைமை குறித்து விளக்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்