முதல்கட்டமாக 124 தொகுதிகளில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, நக்ஸலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்களில் தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் சென்ற வாகனத்தை நக்ஸலைட்டுகள் தகர்த்ததில், அதிலிருந்த 5 பேர் உயிரிழந்தனர். 2 அதிகாரிகள் காயம் அடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தன்டேவாடா மற்றும் நாராயண்பூர் பகுதிகளில் வாக்குச்சாவடிகளில் நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிஆர்பிஎஃப்-ஐச் சேர்ந்த ஜவான் ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் காயம் அடைந்தனர். நக்ஸலைட்டுகள் தரப்பில் உயிரிழப்பு குறித்து தெரியவில்லை.
ராய்ப்பூரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள மங்க்நார், ஜன்கம்பால், நேர்னார், சோனாபால், கர்மாரி ஆகிய இடங்களிலும் நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதல்களில் பலர் காயம் அடைந்தாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் லத்தேஹார் பகுதியில் சிஆர்பிஎஃப் படையினர் மீது தாக்குதல் நடத்திய அடுத்த நாளே, எல்லைப்பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) சென்ற வாகனத்தைக் குறித்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிலக்கண்ணிவெடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பிஎஸ்எஃப்-ஐச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
லதூப் பகுதியில் இருந்து அரா நோக்கி எல்லைப்பாதுகாப்புப் படையினர் வந்து கொண்டிருந்த போது, இத்தாக்குதல் நடைபெற்றதாக காவல்துறை துணை ஆணையர் தெரிவித்தார்.
பீகாரில் தேர்தல் பணியில் இருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும், காவலர் ஒருவரும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 காவலர்களைக் காணவில்லை.
ஒரிசா மாநிலத்தில் மால்கங்கிரி மாவட்டத்தில் 3 வாக்குச்சாவடிகளுக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தீவைத்தனர். இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாயின. சிறிது நேரத்திற்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
அட்ராஹால் என்ற இடத்தில் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மாவோயிஸ்ட் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தேர்தல் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை தீயிட்டு எரித்தனர். இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
கலிமேலா காவல் எல்லையில் சலிமாரிக் கொண்டா, எம்வி -73 ஆகிய இரு இடங்களில் வாக்குச்சாவடிகளுக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தீ வைத்தனர்.
மதிலி என்ற இடத்தில் தேர்தல் அதிகாரிகளைச் செல்லவிடாமல் தடுக்கும் வகையில், சாலைகளில் மரங்களை வெட்டி மாவோயிஸ்டுகள் போட்டனர்.
இதேபோல மகாராஷ்டிர மாநிலக் கட்சிரோலி மாவட்டத்தில் நக்ஸலைட்டுகள் நடத்தவிருந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக மாநில உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.