18 வயதான அனைவருக்கும் அடையாள அட்டை

ஞாயிறு, 25 ஜனவரி 2009 (11:39 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க அதிரடியான திட்டம் ஒன்றை ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.

தீ‌விரவா‌திக‌‌ளி‌ன் ஊடுருவலை‌த் தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் செய‌ல்படு‌த்த‌ப்பட உ‌ள்ள இ‌ந்த ‌தி‌ட்ட‌ம் வரு‌ம் 2011-ம் ஆண்டுக்குள் நட‌த்‌தி முடி‌க்க தீவிர ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி வந்து தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த 20-ந் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சக‌ம் ஏ‌ற்பாடு செ‌ய்‌திரு‌ந்த உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெ‌ற்றது. மத்திய அரசின் உயர் அதிகாரிக‌ள் பலரு‌ம் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகத்தின் சார்பில் இந்த கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை செயலாளர் லீனா நாயர், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் டி.ஜி.பி. ஜெகன் சேஷாத்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் பல மு‌க்‌கிய முடிவுக‌ள் எடு‌க்க‌ப்ப‌ட்டன.

அ‌தி‌ல், தேசிய மக்கள் தொகை பதிவு திட்டத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்-பெண் அனைவருடைய எண்ணிக்கையையும் உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டையை போல, தேசிய பல்நோக்கு அடையாள அட்டை என்ற அடையாள அட்டையை வழங்க வேண்டும். இந்த அடையாள அட்டையில் அடையாள அட்டைக்குரிய நபரின் பெயர், வயது, நிரந்தர, தற்காலிக முகவரி, தந்தையின் பெயர் போன்ற விவரங்களோடு அட்டைதாரரின் புகைப்படம் மற்றும் கைரேகையையும் பதிவு செய்ய வேண்டும்.

முதல் கட்டமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும். கடலோர பகுதி மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி முடிந்தவுடன், மற்ற பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் அடுத்தகட்டமாக அடையாள அட்டையை வழங்கும் பணியை தொடங்க வேண்டும். அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்குவதற்கு முன்பு முடித்துவிட வேண்டும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். மாநில அரசுகள் இந்த திட்டத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வருகிற பிப்ரவரி 1-ந் தேதிக்குள் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பற்றிய விவரங்களை அந்தந்த மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்திய எலக்ட்ரானிக் கழகம் உள்பட மத்திய அரசின் 3 நிறுவனங்கள் மூலம் இந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். அடையாள அட்டையின் வடிவ‌ம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் எ‌ன்று முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்