காஷ்மீர் விவகாரம் : இங்கி. அமைச்சர் கருத்து ஏற்புடையது அல்ல- அரசு
புதன், 21 ஜனவரி 2009 (16:34 IST)
இந்தியா வந்திருந்த இங்கிலாந்து அயலுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட், பயங்கரவாதத்துடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து கூறிய கருத்துக்கள் தங்களுக்கு ஏற்புடையது அல்ல என்ற விவரத்தை முறையாக ராஜ்யரீதியான வழிகளில் இங்கிலாந்திற்குத் தெரிவித்து விட்டோம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இங்கிலாந்து அமைச்சர் டேவிட் மிலிபான்ட், பயங்கரவாதம் பற்றிப் பேசுகையில் அத்துடன் காஷ்மீர் விவகாரத்தையும் இணைத்துப் பேசினார்.
மேலும், பாகிஸ்தான் நீதித்துறையை தான் நம்புவதாகத் தெரிவித்த அவர், மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் அந்நாட்டின் நீதித்துறையின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.
இந்தக் கருத்து இந்தியாவிற்கு ஏற்புடையது அல்ல என்று விளக்கி, பிரதமர் மன்மோகன் சிங் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரெளனிற்கு கடிதம் எழுதி உள்ளதாகத் தகவல் வெளியாகின.
இதுகுறித்துத் தலைநகர் டெல்லியில் இன்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கேட்டதற்கு, "இரு நாடுகளுக்கு இடையிலான வழக்கமான ராஜ்யரீதியான வழிகளில் நமது அதிருப்தி தெரிவிக்கப்பட்டுவிட்டது. இனி இது முடிந்துபோன விவகாரம்" என்றார்.
இங்கிலாந்து அமைச்சர் இந்தியாவிற்கு வந்தவுடன் தன்னிடமும், இந்தியப் பிரதிநிதிகள் குழுவுடனும் அவரது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதாக தெரிவித்த பிரணாப், "அது அவருடைய தனிப்பட்ட கருத்து, அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நான் உடனடியாக அவரிடமும், விவாதத்தில் பங்கேற்க வந்திருந்தவர்களிடமும் தெரிவித்துவிட்டேன்" என்றார்.