விமானத்தில் தீ: 46 பயணிகள் உயிர் தப்பினர்

சனி, 17 ஜனவரி 2009 (11:55 IST)
கொல்கட்டாவில் விமான நிலையத்தில் இருந்து அஸ்ஸாமின் குவஹாத்தி நகருக்கு 38 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் விமானத்தில் தீப்பிடித்தது. எனினும் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

கொல்கட்டாவில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு புறப்பட்ட S2-361 என்ற தனியாருக்கு சொந்தமான விமானத்தில் 38 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்தனர். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானத்தின் இன்ஜின் பகுதியில் தீப்பிடித்தது.

இதையடுத்து சுதாரித்த விமானி, அந்த இன்ஜினை அணைத்து விட்டு, மீண்டும் கொல்கட்டா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், பயணிகள், ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இதற்கிடையில், குவஹாத்தி செல்ல வேண்டிய பயணிகள் இன்று காலை 10 மணிக்கு வேறொரு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்