மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய ட்ரைடண்ட்-ஓபராய் நட்சத்திர விடுதியை பிரதமர் மன்மோகன் சிங் இன்று பார்வையிடுகிறார்.
மும்பையில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட பிறகு பிரதமர் அங்கு செல்வது இதுவே முதல்முறை.
இந்தப் பயணத்தின் போது ட்ரைடண்ட்-ஓபராய் நட்சத்திர விடுதிக்குச் செல்கிறார். அங்கு நடைபெறவிருக்கும் விருது வழங்கும் விழாவில் பிரதமர் கலந்து கொள்ளவிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே விடுதியில் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது.
தொடர்ந்து விடுதியை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்களுக்கு இன்னமும் திறக்கப்படவில்லை.
பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில், இந்த விடுதி மோசமாகச் சேதம் அடைந்தது.
விமான நிலையத்தில் இருந்து தெற்குமும்பையில் உள்ள ஐஎன்எஸ் குஞ்சாலி கடற்படை தளத்திற்கு பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் செல்வார் என்றும் அரசு வட்டாரங்கள் கூறின.