கோல்டன் குளோப் விருது பெற்று சென்னை திரும்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விமானநிலைத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் திரைப்படம், நாடகம், தொலைக்காட்சித் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ஹாலிவுட்டைச் சேர்ந்த திரைப்பட விமர்சகர் அமைப்பு ஆண்டுதோறும் ‘கோல்டன் குளோப்’ விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் நகரில் இதன் 66-வது ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ என்ற ஆங்கிலப் படத்துக்கு சிறப்பாக இசையமைத்தற்காக தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான ‘கோல்டன் குளோப்’ விருது வழங்கப்பட்டது.
இதன் மூலம், ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெறும் முதல் இந்திய இசைக் கலைஞர் என்ற பெருமையையும் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார்.
இன்று அதிகாலை சென்னை திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராமிய இசைக் கலைஞர்கள் தங்கள் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியதுடன், ஏராளமான ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், தனக்குக் கிடைத்த இந்த விருதை தமிழர்களுடனும், இந்தியர்களுடனும் பரிந்து கொள்வதாக தெரிவித்தார்.