பிரதமரைச் சந்தித்தார் ஹமீது கர்சாய்

திங்கள், 12 ஜனவரி 2009 (16:45 IST)
புதுடெல்லி வந்துள்ள ஆப்கான் பிரதமர் ஹமீது கர்சாய், இன்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுகள் நடத்தினார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவலைத் தொடர்ந்து, பயங்கரவாத அச்சுறுத்தலை இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து முறியடிப்பது குறித்தும், பிரதமரும் கர்சாயும் பேச்சு நடத்தியதாக புதுடெல்லியில் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 5 மாதங்களில் 2ஆவது முறையாக புதுடெல்லி வந்துள்ள கர்சாய், மும்பை தாக்குதல் சம்பவங்களுக்குப் பின் எழுந்துள்ள நிலைமை குறித்தும் பிரதமருடன் பேசியதாகத் தெரிகிறது.

கர்சாயுடன் ஆப்கான் வெளியுறவு அமைச்சர் ரன்ஜின் ஸ்பான்டா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜல்மாய் ரசௌல் ஆகியோர் கொண்ட குழுவும் புதுடெல்லி வந்துள்ளது.

மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற சில தினங்களுக்குப் பிறகு திட்டமிடப்பட்டிருந்த கர்சாயின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், மும்பை தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, இந்தியாவிற்கு ஒத்துழைப்பு நல்குவதற்கும் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை தாக்குதலில் லஷ்கர்-ஈ-தோய்பாவிற்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களையும், பாகிஸ்தான் சக்திகளின் தொடர்பையும் கர்சாயுடன் பிரதமர் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது.

இந்தியா - ஆப்கானிஸ்தானுக்கு இடையே தற்போதுள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்கானின் நிலைப்பாடு குறித்தும் பேச்சுகள் நடைபெற்றதாக கர்சாய் அலுவலகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணை பற்றியும் கர்சாய், பிரதமரிடம் எடுத்துக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்