எண்ணெய் வளங்கள் பயங்கரவாதத்தின் இலக்காகலாம்: பிரணாப் எச்சரிக்கை
திங்கள், 12 ஜனவரி 2009 (15:23 IST)
மும்பைத் தாக்குதல் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதம் என்று கூறியுள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நமது நாட்டின் எண்ணெய் வளங்கள் அரசு அல்லது அரசு சாரா அமைப்புகளின் தாக்குதலிற்கு உட்படும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த பெட்ரோலிய தொழில்நுட்ப மாநாட்டைத் துவக்கிவைத்து உரையாற்றிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “சமீபத்தில் மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்டதாகும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சிதைப்பதே இப்படிப்பட்ட மன்னிக்க முடியாத தாக்குதல்களில் ஈடுபடும் அரசோ அல்லது அரசு சாரா அமைப்புகளின் நோக்கம் என்பதே மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்” என்று கூறினார். அதிலும் குறிப்பாக எண்ணெய் வளங்கள் அப்படிப்பட்ட தாக்குதல்களின் முக்கிய இலக்காக இருக்கும் என்று எச்சரிக்கை செய்த அமைச்சர் பிரணாப், அவைகளைக் காப்பதே ஒவ்வொரு அரசின் தலையாய சட்டப் பிரச்சனையாக இருக்கும் என்று கூறினார்.
எண்ணெய் வள சொத்துக்கள் மட்டுமின்றி, எண்ணெய் கொண்டு செல்லும் தடங்களைக் காப்பதில் சர்வதேச சமூகத்தி்ன் ஒத்துழைப்பு அவசியமானது என்றும் கூறிய பிரணாப் முகர்ஜி, அப்படிப்பட்ட ஒத்துழைப்பின் மூலம்தான் எண்ணெய் உற்பத்தி, வழங்கல், புதிய உற்பத்திக் கட்டமைப்புகளை உருவாக்குதல், அவைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய முடியும் என்று கூறினார்.