நாட்டின் வட மாநிலங்களில் தொடர்ந்து நீடித்து வரும் கடுமையான குளிருக்கு இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் 22 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவாடா மாவட்டத்தில் அதிகபட்சமாகவும், கிஷன்கஞ்ச், போஜ்பூர் மாவட்டங்களில் அதற்கு அடுத்தபடியாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்னாவில் அனைத்து பள்ளிகளுக்கும் புதன்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்தவர்கள் இந்த கடுங்குளிருக்கு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் கயாவில் மிகவும் குறைந்த அளவு வெப்பநிலை பதிவானது. உத்தரப்பிரதேசத்தைப் பொருத்தவரை உயிரிழப்பு 35 ஆக உயர்ந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடுமையான மூடுபனி காரணமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இன்று காலை பாங்கி ரயில் நிலையத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாயின. இதையடுத்து அந்த வழியாக வந்து செல்லும் மற்ற ரயில்கள் வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டன.
தலைநகர் டெல்லியிலும், சண்டிகர். பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுமையான மூடுபனி நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.