புதிய கட்சி தொடங்குகிறார் நாராயண் ரானே!

சனி, 3 ஜனவரி 2009 (14:01 IST)
மகாராஷ்டிர மாநில முன்னாள் வருவாய் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளவருமான நாராயண் ரானே புதிய கட்சியை தொடங்குவதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது தமக்கு நம்பிக்கையில்லை என்று மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், விலாஸ்ராவ் தேஷ்முக் அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து தேஷ்முக் மாற்றப்பட்டு அசோக் சவான் முதல்வரானார்.

இதையடுத்து அதிருப்தியடைந்த நாராயண் ரானே காங்கிரஸ் தலைமையை விமர்சித்துப் பேசினார். இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி நாராயண் ரானே காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார்.

மும்பை மற்றும் கொங்கன் பகுதிகளில் செல்வாக்கு பெற்ற நாராயண் ரானேவின் நீக்கத்தால் காங்கிரஸ் கட்சிக்கு அப்பகுதிகளில் சற்றே பாதிப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வராக தம்மைத் தேர்வு செய்யாதது குறித்து காங்கிரஸ் தலைமையிடம் இருந்து தம்மிடம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்று கூறிய ரானே, விளக்கம் தெரிவித்தாலும் தனது முடிவில் மாற்றமில்லை என்றார்.

முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், மாநில காங்கிரஸ் தலைவர் மானிக்ராவ் தாக்கரே ஆகியோர் மீதும் ரானே குற்றம்சாட்டினார்.

விரைவில் புதிய கட்சியை தொடங்கப்போவதாக அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்