இளைஞர்களின் திறமைகளை விஞ்ஞானிகள் ஊக்குவிக்க வேண்டும் : பிரதமர்
சனி, 3 ஜனவரி 2009 (13:33 IST)
பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும், இளைஞர்களின் திறமைகளை விஞ்ஞானிகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
ஷில்லாங்கில் இன்று 96ஆவது இந்திய அறிவியல் மாநாட்டைத் துவங்கி வைத்துப் பேசிய பிரதமர், இளைஞர்களால்தான் அறிவியலைச் சிறந்த முறையில் வளர்க்க முடியும். எனவே இளைஞர்களின் தேவைகளுக்கு நமது கல்வி நிறுவனங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இளம் தலைமுறையின் திறமைகளை மதிப்பதுடன், அவர்கள் தலைமையேற்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் இருந்து மட்டுமல்ல, புதிதாகத் தொழில்மயம் ஆகியுள்ள ஆசியப் பொருளாதாரங்களில் இருந்தும் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்தியா முன்னேற அரசு நடவடிக்கைகளை எடுத்தாலும், திறமை வாய்ந்த தலைமை அறிவியல் சமூகத்தில் இருந்துதான் வர முடியும்.
ஆராய்ச்சி சூழலை உருவாக்கி வளர்க்க நமது பல்கலைக்கழகங்கள் இன்னும் நிறைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிறுவனத் தலைமையை வலுப்படுத்த வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.
அரசு அதிகாரிகளுக்கு வேண்டுமானால் வயது மூப்பு, பணி மூப்பு ஆகியவை பொருத்தமாக இருக்கலாம். ஆனால், நமது அறிவியல் கல்வி நிறுவனங்களின் தலைமை வயது சாராமல் அறிவுத்திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்" என்றார் பிரதமர்.