வங்கதேச எல்லையில் ஊடுருவலைத் தடுக்க கூடுதல் படைகள் தேவை: பி.எஸ்.எஃப்

சனி, 3 ஜனவரி 2009 (12:10 IST)
இந்திய-வங்கதேச எல்லையில் ஊடுருவலைத் தடுக்க கூடுதல் படைகள் தேவைப்படுவதாக எல்லைப் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவஹாத்தியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் நேற்று நடந்த பாதுகாப்புக் உயரதிகாரிகள் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மொத்தம் 577 கி.மீ நீளமுள்ள எல்லைப்பகுதியில் 91 கி.மீ தூரம் மட்டுமே வேலி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. 129 கி.மீ தூரத்திற்கு வேலி அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

எல்லைப்பகுதியில் ஊடுருவலைத் தடுக்க 11 ‌பட்டாலியன் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், படைகள் போதவில்லை என எல்லைப் பாதுகாப்பு படையினர் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் மேகாலயாவில் உள்ள ஜெய்ன்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் பிரச்சனை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்