மும்பை தாக்குதலில் தொடர்புடைய இருவருக்கு காவல்துறைக் காவல்!
புதன், 31 டிசம்பர் 2008 (14:52 IST)
மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஃபாஹிம் அன்சாரி, சஹாபுதீன் ஆகிய இரண்டு பேரை ரிமாண்ட் செய்துள்ள நீதிமன்றம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கில் அவர்கள் இருவரையும் ஜனவரி 12 வரை காவல்துறைக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் மத்திய ரிசர்வ் காவல்படை முகாம் மீது நடந்த தாக்குதலில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டு உ.பி. காவல்துறைக் காவலில் அடைக்கப்பட்டிருந்த ஃபாஹிம் அன்சாரி, சஹாபுதீன் ஆகிய இரண்டு பேருக்கும், மும்பை மீதான தாக்குதலிலும் தொடர்புள்ளது என்று தெரிய வந்தததையடுத்து, கடந்த 18 ஆம் தேதி மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.
மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவியது தொடர்பாக அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வந்த மும்பைக் குற்றப்பிரிவு காவலர்கள், இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, நவம்பர் 26 அன்று இரவு காவலர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதல் தொடர்பாக டி.பி. மார்க் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் அவர்கள் இருவரையும் ஜனவரி 12 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேநேரத்தில், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு பற்றிய வழக்கில் அவர்கள் இருவரையும் ஜனவரி 12 வரை காவல்துறைக் காவலில் வைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் அமிர் இமான் மற்றும் கொல்லப்பட்ட மற்ற 9 பயங்கரவாதிகள் ஆகியோருக்குத் தேவையான உதவிகளை குற்றம்சாற்றப்பட்டு உள்ள இருவரும் செய்ததாக, அவர்கள் இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்த அனுமதி கேட்ட அரசு வழக்கறிஞர் வாதாடினார்.
மேலும், மும்பையில் பயங்கரவாதிகள் நிர்ணயித்த முக்கிய இலக்குகள் குறித்த தகவல்களை லஸ்கர் ஈ தயீபா இயக்கத்தினருக்கு ஃபாஹிமும், சஹாபுதீனும் வழங்கியுள்ளனர் என்றும் வழக்கறிஞர் கூறினார்.