7 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் அறிவிப்பு
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (19:13 IST)
உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள ஒரு தலைமை நீதிபதி பதவி மற்றும் 6 கூடுதல் நீதிபதிகளுக்கான பணி நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி பரின் கோஷ், ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் சுரேந்திர மோகன் குரியகோஸ், பரப்பில்லில் ராமகிருஷ்ணன் நாயர் ராமச்சந்திர மேனன், சந்திரவில்லா கோயனலிபிள்ள அப்துல் ரஹிம், மற்றும் சுடலயில் தேவன் ரவிகுமார் ஆகியோர் கேரள உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இதே பதவி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மற்றொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கவுகாத்தி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக, அருண் சந்திர உபாத்யாய மற்றும் சித்த ரஞ்சன் சர்மா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நியமனமும் நீதிபதிகள் பதவியேற்ற நாள் முதல் அமலுக்கு வருகிறது என்றும் கூடுதல் நீதிபதிகள் 2 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.