எல்லைப் பிரச்சனையில் இந்தியா- சீனா மீண்டும் பேச்சு : பிரணாப்!
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (17:28 IST)
இந்தியா- சீனா இடையிலான இருதரப்பு உறவுகளில் நல்ல முன்னேற்றம் தென்பட்டாலும், எல்லைப் பிரச்சனை தொடர்பான பேச்சு தொடரும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று இந்திய- சீன உறவுகளின் எதிர்காலம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "எல்லைப் பிரச்சனை தொடர்பான எல்லா விடயங்களும் பேசித் தீர்க்கப்பட வேண்டும்" என்றார்.
எல்லைப் பிரச்சனையை அரசியல் மட்டத்தில் பேசித் தீர்ப்பதற்காகச் சிறப்புப் பிரதிநிதிகளை இரு நாடுகளும் நியமித்துள்ளன. அவர்கள் இதுவரை 12 சுற்றுப் பேச்சுக்களை நடத்தி முடித்துள்ளனர். இன்னும் நிறைய சுற்றுப் பேச்சுக்கள் நடக்கவுள்ளன என்று கூறிய அவர், அடுத்த சுற்றுப் பேச்சு எப்போது நடக்கும் என்பது பற்றி எதையும் தெரிவிக்கவில்லை.
எல்லைப் பிரச்சனை குறித்து விவாதித்து வரும் சிறப்புப் பிரதிநிதிகளான தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், சீன அரசு வழக்கறிஞர் டாய் பிங்கோ இடையிலான கடைசி சுற்றுப் பேச்சு பீஜிங்கில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.
எல்லைப் பிரச்சனைக்கு ராஜ்யரீதியான வழிமுறைகளில் தீர்வுகாண இயலாத காரணத்தால், ஒட்டுமொத்த நல்லுறவுகள் மூலம் அரசியல் தீர்வு காணும் வகையில் கடந்த 2003ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவும் சீனாவும் சிறப்புப் பிரநிதிகளை நியமித்தன.
கடந்த 1963 இல் கையெழுத்தான சீனா- பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் கீழ் சீனாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்த 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பையும் சேர்த்து, ஜம்மு- காஷ்மீர் பகுதியில் 43,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று இந்தியா குற்றம்சாற்றியுள்ளது.
இதேபோல தனக்குச் சொந்தமான 90,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்றும், அதில் பெரும்பகுதி அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளது என்றும் சீனா குற்றம்சாற்றியுள்ளது.