கர்நாடக இடைத் தேர்தல்: பா.ஜ.க. 5 இடங்களில் வெற்றி!
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (15:04 IST)
கர்நாடகத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. 5 இடங்களில் வெற்றி பெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதனால், மொத்தம் 224 உறுப்பினர் பதவிகளைக் கொண்ட கர்நாடகச் சட்டப் பேரவையில் பா.ஜ.க.வின் பலம் 115 ஆக உயர்ந்துள்ளது.
பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட பாலச்சந்திர ஜராகிஹோலி (அரபாவி தொகுதி), உமேஷ் கட்டி (ஹூக்கேரி தொகுதி), ஷிவனகெளடா நாயக் (தேவதுர்கா தொகுதி), ஆனந்த் அஸ்னோதிகார் (கார்வார் தொகுதி) ஆகிய நான்கு அமைச்சர்களும் வெற்றிபெற்றள்ளனர்.
இவர்கள் தவிர தோடாபலபூர் தொகுதியில் போட்டியிட்ட நரசிம்ம சாமி வெற்றிபெற்றுள்ளார்.
மதசார்பற்ற ஜனதா தளம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள மதுகிரி, துருவேக்கேரே, மாண்டியா மாவட்டத்தில் உள்ள மடூர் ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து மேற்கொண்ட தீவிரப் பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடவில்லை.
இதுகுறித்து கர்நாடக மாநிலக் காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரிடம் கேட்டதற்கு, "மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்." என்றார்.
"இது வளர்ச்சிக்கான வாக்களிப்பு அல்ல. தனது துரோகத்திற்காக பா.ஜ.க. நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டும்." என்று மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் பேச்சாளர் ஒய்.எஸ்.வி. தத்தா கூறினார்.