பாலஸ்தீனம் மீது தாக்குதல்: இஸ்ரேலிற்கு இந்தியா கண்டனம்

திங்கள், 29 டிசம்பர் 2008 (20:20 IST)
பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திவரும் விமானத் தாக்குதல் தேவையற்றது, கண்டனத்திற்குறியது என்று இந்தியா கூறியுள்ளது.

இஸ்ரேலின் தென் பகுதி மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலிற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திவரும் விமானத் தாக்குதல் ‘மிக அதிகமானது’ என்று கூறியுள்ள இந்திய அயலுறவு அமைச்சகத்தின் அறிக்கை, இப்படிப்பட்ட தாக்குதல்களின் காரணமாக அமைதி வழியில் தீர்வுகாண்பதற்கான வாய்ப்பு நிரந்தரமாக திசைமாறிவிடும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்துள்ளது.

இஸ்ரேலிய விமானங்கள் காசா பகுதி மீது நடத்திவரும் தொடர் தாக்குதல்களில் இதுவரை 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்துள்ள அயலுறவு அமைச்சக அறிக்கை, “இஸ்ரேலின் தென் பகுதி மீது எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்துள்ளது. ஆனால் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் அதிகபட்சத் தாக்குதல் தேவையற்றது, கண்டனத்திற்குரியது. காசாவில் வாழ்ந்துவரும் பாலஸ்தீன மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ள இத்தாக்குதலை உடனடியாக இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

ஹமாஸ் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலிய விமானங்கள் குண்டுமழை பொழிந்து 300க்கும் அதிகமானோரைக் கொன்றதை ‘மிக அதிகமானத’, ‘தேவையற்றது’ என்று கூறி கண்டித்துள்ள அயலுறவு அமைச்சகம் இதைவிட அதிகமான அளவில் பல மாதங்களாக ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசின் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து வருவதைக் கண்டித்து ஒருமுறை கூட இப்படிப்பட்ட அறிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்