போர் பற்றிப் பேசி பிரச்சனையை திசைதிருப்புகிறது பாகிஸ்தான்: பிரணாப் குற்றச்சாற்று

சனி, 27 டிசம்பர் 2008 (18:35 IST)
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி பிரச்சனையை திசைதிருப்புகிறது பாகிஸ்தான் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் இன்று நடந்த இந்திய பார்சி ஆசிரியர்களின் பன்னாட்டு மாநாட்டில் பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, போர் மூளும் சூழல் உள்ளதுபோல் அறிக்கைகளை விடுத்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

“போரைப் பற்றிப் பேசி பயங்கரவாதப் பிரச்சனையிலிருந்து திசைதிருப்பும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு ஈடுபடக்கூடாது” என்று கூறிய பிரணாப், இப்போது இருநாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்சனை பயங்கரவாதம் தானே தவிர போர் அல்ல. எனவே போரைப் பற்றிப் பேசி பதற்றத்தை அதிகப்படுத்துவதைவிட, தங்களது மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

பயங்கரவாதத்திற்கு மதமோ, தேசமோ கிடையாது. ஆனால் அது உலகளாவிய அளவில் ஒரு அச்சுறுத்தல், அதனை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்துதான் எதிர்க்க வேண்டும் என்று கூறிய பிரணாப் முகர்ஜி, நாம் எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும் போர் தொடுக்கத் தேவையில்லை, பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடுத்தால் போதும், அதில்தான் பாகிஸ்தான் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்