ஒற்றுமையே நமது வலிமையான ஆயுதம்: பிரதீபா பாட்டீல்!
சனி, 27 டிசம்பர் 2008 (17:25 IST)
ஆயுதங்களை ஏந்திய பயங்கரவாதத்திற்கு எதிரான வலிமையான ஆயுதம் நமது ஒற்றுமைதான் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறினார்.
இதுகுறித்து, நாக்பூரில் இன்று 'மத நல்லிணக்கமும், சமூக அமைதியும்' என்ற கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசிய அவர், மும்பை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது நமது ஒருங்கிணைந்த பண்பாட்டின் மீதும், அடையாளத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டார்.
சகிப்புத்தன்மை இல்லாத சூழலில் வளரும் பயங்கரவாதிகளால் நமது தேசத்தின் பண்பாட்டுக் கூறுகள் பாதிக்கப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்ற அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான வலிமையான ஆயுதம் நமது ஒற்றுமைதான் என்றார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு சர்வதேசச் சமூகம் நம்முடன் இணைந்து நிற்பதைக் குறிப்பிட்ட பிரதீபா பாட்டீல், பயங்கரவாதத்தை வலிமையான வார்த்தைகளால் கண்டிப்பதுடன், அதற்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பயங்கரவாதமும், அதை ஆதரிப்பவர்களும் அமைதியாக உலகைக் கட்டும் முயற்சிகளை முறியடிக்கிறார்கள். சர்வதேச பயங்கரவாதம் என்ற இந்தப் பொது எதிரிக்கு எதிராக எல்லா நாடுகளும் கைகளைக் கோர்த்துப் போராட் வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார் அவர்.