பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவிற்கு ரஷ்யா உதவும்: ரஷ்யத் தூதர்
சனி, 27 டிசம்பர் 2008 (13:41 IST)
மும்பைத் தாக்குதலின் பின்னனியில் செயல்பட்ட பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த இந்தியாவிற்கு எல்லா வழிகளிலும் ரஷ்யா உதவும் என்று இந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் வியாசலேவ் டிரப்னிகோவ் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று பன்னாட்டு ஒற்றுமை அமைப்பும், ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மையமும் இணைந்து ஏற்பாடு செய்த ‘இந்திய-ரஷ்ய உறவு’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய தூதர் வியாசலேவ் டிரப்னிகோவ், பயங்கரவாதத்தை முழுமையாக அழித்தொழிக்க உலகளாவிய அளவில் ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என்றும், “பயங்கரவாதத்தை ஒழிக்க, அதன் கட்டமைப்புகளை அகற்றிட இந்தியா மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்ககைகளுக்கும் ரஷ்யா தனது முழு ஒத்துழைப்பை அளிக்கும்” என்று கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் ரஷ்யாவும் இராணுவ அடிப்படையிலான ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும், மும்பைத் தாக்குதலின் பின்னனியில் செயல்பட்ட பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த இந்தியாவிற்கு ரஷ்யா எல்லா விததிலும் உதவும் என்றும் டிரப்னிகோவ் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹரியானா ஆளுநர் ஏ.ஆர். கித்வாய், ஜம்மு-காஷ்மீர் உட்பட அனைத்து முக்கிய சிக்கல்களிலும் இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா நிற்கிறது என்று கூறினார்.
பன்னாட்டு ஒற்றுமை அமைப்பின் தலைமைப் பொதுச் செயலர் ஆர்.என்.அனில், ரஷ்ய அதிபர் மெட்விடேவின் இந்தியப் பயணம் இரு நாட்டு உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.
பாதுகாப்பு, எரிசக்தி, எண்ணெய் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை இருந்ததைவிட அதிக ஒத்துழைப்பிற்கு வழிகாணப்பட்டுள்ளது என்று கூறிய அனில், சியாச்சின் போன்ற உயர் மலைப் பகுதிகளைக் கண்காணிக்க எம்.ஐ. 17 ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்க ரஷ்யா சம்மதித்துள்ளதாகக் கூறினார்.