இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், சீன அயலுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சி இருவரும் நமது அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
நேற்றிரவு நடந்த இந்தத் தொலைபேசி உரையாடலின் போது மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என அமெரிக்கா, சீனாவிடம் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மும்பை தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவும், சீனாவும் வலியுறுத்த வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி அப்போது கூறியிருப்பார் என நம்பப்படுகிறது.
மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும், அதற்கு பாகிஸ்தான் ஸ்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் அமெரிக்கா முனைப்புடன் உள்ளதாக பிரணாப் முகர்ஜியிடம் காண்டலீசா ரைஸ் அப்போது கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-ஈ-தயீபா அமைப்புதான் காரணம் என அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.