பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 பயங்கரவாதிகள் ஜம்முவில் கைது!
வியாழன், 25 டிசம்பர் 2008 (12:56 IST)
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேரை, ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.
உதம்பூர் நகரத்திற்கு அருகில் உள்ள தனோவா என்ற கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் ரகசியத் தகவலின்பேரில் நடத்திய தேடுதல் வேட்டையில், தோடா மாவட்டத்தைச் சேர்ந்த பஷீர் அகமது லோஹார் என்ற பிலால், கிஸ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக் ஹூசைன் என்ற ஷமீம் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த இவர்களில் பஷீர் அகமது லோஹார், பாகிஸ்தானிலும் ஆஃப்கானிஸ்தானிலும் 1991 முதல் 1993 வரை பயிற்சி பெற்றுள்ளான். இவன் ரிமோட் மூலம் வெடிகுண்டுகளை இயக்குவதில் திறமை வாய்ந்தவன் என்று காவலர்கள் தெரிவித்தனர்.
லோஹாரின் சகோதரன் குலாம் ஹசன் என்பவனும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றுள்ளான். இவன், அண்மையில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஆஷிக் ஹூசைன் ஒரு உள்ளூர் பயங்கரவாதி. இவர் லோஹாருக்கு உதவியாக இருந்துள்ளான். இவர்கள் இருவரும் சேர்ந்து உதம்பூரில் குண்டு வெடிப்பை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அருகில் உள்ள ரம்பன் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடி பொருட்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.