ஜம்மு- காஷ்மீர் இறுதிக் கட்டத் தேர்தல்: 55 % வாக்குகள் பதிவு!
புதன், 24 டிசம்பர் 2008 (20:47 IST)
ஜம்மு- காஷ்மீரில் இன்று இறுதிக் கட்டமாக 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 55 % வாக்குகள் பதிவானதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு- காஷ்மீரில்௦ மொத்தம் உள்ள 87 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த நவம்பர் 17 முதல் ஏழு கட்டங்களாக நடந்து வந்த வாக்குப்பதிவு இன்று பிற்பகலுடன் முடிவடைந்தது. அனைத்துத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இம்மாதம் 28 ஆம் தேதி நடக்கவுள்ளது.
ஏழாவது- இறுதிக் கட்டமாக ஜம்மு, ஸ்ரீநகர், சம்பா ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளுக்கு இன்று நடந்த தேர்தலில் 55 % வாக்குகள் பதிவாகி உள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த 2002 ஆம் ஆண்டு பதிவான வாக்குகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக சம்பா தொகுதியில் 78%, சாம்ப் தொகுதியில் 77%, ஆர்.எஸ். புரம் மற்றும் அக்னூர் தொகுதிகளில் 75%, நக்ரோட்டா மற்றும் விஜய்பூர் தொகுதிகளில் 73%, பிஸ்னா மற்றும் மார்ஹ் தொகுதிகளில் 72%, சச்செட்கார் மற்றும் ராய்ப்பூர் டொமனா தொகுதிகளில் 70% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநிலத் தேர்தல் அதிகாரி பி.ஆர். சர்மா தெரிவித்தார்.
பல தொகுதிகளில் 2002 ஆம் ஆண்டை விட கூடுதலாக வாக்குகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா போட்டியிட்ட ஹஸ்ரட்பால் தொகுதி 26.5 % (2002இல் 7.12%), ஷெர்- இ- காஸ் தொகுதி 16.54% (2002இல் 3.21%) என்றவாறு வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஒட்டுமொத்தமாக 61% வாக்குகள் பதிவு
ஜம்மு- காஷ்மீரில் 87 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த ஏழு கட்டத் தேர்தலிலும் சராசரியாக 61% வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் கட்டமாக நவம்பர் 17 அன்று 10 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக நவமபர் 23 அன்று 6 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக நவம்பர் 30 அன்று 5 தொகுதிகளுக்கும், நான்காம் கட்டமாக டிசம்பர் 7 அன்று 18 தொகுதிகளுக்கும், ஐந்தாம் கட்டமாக டிசம்பர் 13 அன்று 11 தொகுதிகளுக்கும், ஆறாம் கட்டமாக டிசம்பர் 17 அன்று 17 தொகுதிகளுக்கும், ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக டிசம்பர் 24 அன்று 21 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
அனைத்துக் கட்டத் தேர்தலிற்குமான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 28 ஆம் தேதி நடக்கவுள்ளது.
பிரிவினைவாதிகளின் தேர்தல் எதிர்ப்புப் போராட்டங்கள், தேர்தல் புறக்கணிப்பு அழைப்புகளுக்கு இடையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி, தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு, மோதல், தீவிரவாதிகளின் கைவரிசை, வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு ஆகிய தேர்தலைச் சீர்குலைக்கும் முயற்சிகளுக்கும் பஞ்சமில்லை.