அஜ்மல் கசாப் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!
புதன், 24 டிசம்பர் 2008 (16:08 IST)
மும்பை மீதான பயங்கரவாத தாக்குதலின்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான மொஹம்மது அஜ்மல் அமிர் இமான் கசாப் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்கோடா கார் ஒன்றைக் கடத்தியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்குடன் சேர்த்து கசாப் மீது இதுவரை 12 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 6 வரை காவல் நீட்டிப்பு!
ஸ்கோடா கார் கடத்தல் வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்று காவலர்கள் வேண்டியதை ஏற்று அஜ்மலின் காவலை ஜனவரி 6 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணமான அஜ்மல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவில்லை.
அஜ்மல் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு இன்று மூன்றாவது முறையாக வந்த மும்பை மாநகரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி என்.என். ஸ்ரீ மங்கலே, அரசு வழக்கறிஞர் ஏக்நாத் துமால் ஆகியோர் விரிவாக விசாரணை நடத்திய பிறகே காவல் நீட்டிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக அஜ்மலிற்கு விதிக்கப்பட்ட 14 நாள் காவல் முடிந்ததை அடுத்து டிசம்பர் 11ஆம் தேதி சிறைக்கு நேரில் வந்த நீதிபதி, அஜ்மலின் காவலை டிசம்பர் 24 வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 26 அன்று கிர்காம் செளபாட்டி என்ற இடத்தில் ஸ்கோடா கார் ஒன்றைக் கடத்திய அஜ்மல், தன்னுடன் வந்த மற்றொரு பயங்கரவாதியான இஸ்மாயில் கானுடன் சேர்ந்து அதே காரில் நகரைச் சுற்றி வந்து பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
இதில் மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கார்கரே, கூடுதல் ஆணையர் அசோக் காம்தே, என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் விஜய் சலாஸ்கர் ஆகிய மூன்று முக்கிய காவல் அதிகாரிகளும், காவலர்கள் 6 பேரும், பொது மக்கள் பலரும் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இஸ்மாயில் கொல்லப்பட்டான். அஜ்மல் படுகாயத்துடன் மீட்கப்பட்டுக் கைது செய்யப்பட்டான்.
அவன்மீது கொலை, கொலை முயற்சி, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.