புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் அளிப்பது நிறுத்தப்படவில்லை : அமைச்சர் தகவல்
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (19:27 IST)
புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் அளிப்பதை இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐ.ஓ.சி.) நிறுத்திவிடவில்லை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் தின்ஷா படேல் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா எழுப்பிய கேள்விக்கு இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய இணைப்பை வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு 60 நாட்களுக்குள்ளாக கூடிய விரைவில் இணைப்பு தரப்படுகிறது. தற்போது, வீடுகளுக்கு புதிய இணைப்புகள் தரப்பட்டு வருகின்றன.
டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நமது நாட்டில் 10.42 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 53.8 விழுக்காடு வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சுமார் 51.9 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் 31.28 லட்சம் புதிய சமையல் எரிவாயு இணைப்புகளை அளித்துள்ளன. இதில் இந்திய எண்ணெய் நிறுவனம் 15.42 லட்சம் இணைப்புகளை தந்துள்ளது.
2007-08ஆம் ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பினை ஈடுகட்டும் விதமாக மத்திய அரசு ரூ.35,290 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வெளியிட தீர்மானித்துள்ளது.
2008-09ஆம் ஆண்டுக்கான முதல் ஆறு மாதங்களில், எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ரூ.44,967 கோடி மதிப்புள்ள பத்திரங்களை அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. சென்ற மாதத்தில் ரூ.22 ஆயிரம் கோடி மதிப்புள்ள பத்திரங்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டன.
மேலும், வீடுகளுக்கான சமையல் எரிவாயு மற்றும் பொது விநியோக முறை மண்எண்ணெய்க்கு நிதிநிலை அறிக்கையிலிருந்து குறிப்பிட்ட அளவு மானியம் அளிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. 2008-09ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த மானியத்திற்காக ரூ.2,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.