கோவாவிற்கு 375 மத்திய கூடுதல் படையினர் விரைவு
திங்கள், 22 டிசம்பர் 2008 (22:10 IST)
இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவாவில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, மத்தியக் கூடுதல் காவல் படையினர் மற்றும் விரைவு அதிரடிப்படையினர் 375 பேரை மத்திய அரசு கோவாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
மும்பை மீது கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களையடுத்து, பயங்கரவாதிகளின் அடுத்த இலக்காக கோவா இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவித நிகழ்வுகள் எதுவும் நடக்காமல் தடுக்க கூடுதல் துணை ராணுவ படையினரை அனுப்பி வைக்குமாறு கோவா அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.
இதனையேற்று, மத்திய அரசு மத்தியக் கூடுதல் காவல் படையினர் மற்றும் விரைவு அதிரடிப்படையினர் 375 பேரை இன்று கோவாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
பண்டிகையை முன்னிட்டு கோவா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எந்தவித கவலையும் அடைய வேண்டாம் என்று பாதுகாப்பு உயரதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கடற்கரை விருந்தையும் ஏற்கனவே அம்மாநில அரசு தடை செய்துள்ளது.