பாக். ஆதரவு பயங்கரவாதத்தை முறியடிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: பிரணாப்!
திங்கள், 22 டிசம்பர் 2008 (20:13 IST)
அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் எதிரான, பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதத்தின் அபாயகரமான முகங்களை முறியடிக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் இன்று இந்தியத் தூதர்களின் கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விடயத்தில் பொறுப்பைத் தட்டிக்கழித்துப் பழியை யார் மீதோ போடும் பாகிஸ்தானின் போக்கு குறித்து கவலை தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை அரசின் கொள்கைக் கருவிகளில் ஒன்றாகத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் உள்நாட்டுச் சக்திகளை முறியடிக்கப் பாகிஸ்தானின் ஜனநாயக அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்றார் அவர்.
நீண்ட காலமாக இந்தியா அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் நடந்து வந்திருக்கிறது என்று குறிப்பிட்ட பிரணாப், பயங்கரவாத சக்திகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேசச் சமூகம் பாகிஸ்தானிற்கு அழுத்தம் கொடுக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
"பாகிஸ்தானுடனும், சர்வதேசச் சமூகத்துடனும் நாங்கள் தொடர்ந்து இணக்கமாக நடந்தாலும், பிரச்சனையைச் சந்திப்பவர்கள் என்ற முறையில் ஒன்றை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். சூழ்நிலையைச் சந்திக்க நாங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்றார் பிரணாப்.
அண்டை நாடுகளுடனான இருதரப்பு, பலதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கொள்கை நல்ல பலன்களைத் தந்திருந்தாலும், பாகிஸ்தான் தரப்பில் மட்டும் எதிர்விளைவுகளே ஏற்பட்டுள்ளன என்று பொதுவான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
கொடூரம், பெரும் தாக்குதல் ஆகிய வகையில் நாம் இதுவரை பார்த்திராத அளவிற்கு மும்பை பயங்கரவாதத் தாக்குதல் இருந்தது. காபூலில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பயஙகரவாதத் தாக்குதல்களின் தொடர்ச்சிதான் இது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதம் அபாயகரமான வடிவங்களைப் பெற்று, இந்த மண்டலத்தில் மட்டுமன்றி அதைத் தாண்டியும் அமைதிக்கும் நிலைத் தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
பாகிஸ்தானை வற்புறுத்த பலகட்ட நடவடிக்கை!
பயங்கரவாதச் சக்திகளை ஒழிக்க இந்தியா பல மட்டங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச அளவில், பயங்கரவாதச் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானிற்கு அழுத்தம் தர ஆதரவளிக்க வேண்டும் என்று சர்வதேசச் சமுகத்தை கேட்டுக்கொண்டுள்ளோம்.
நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதால் மட்டும் இதைச் சொல்லவில்லை. பயங்கரவாதிகள் ஒழிந்தால் அது பாகிஸ்தான் மக்களுக்கும், சமூகத்திற்கும் மற்றும் ஒட்டுமொத்த உலகத்திற்கும் நல்லது. பாகிஸ்தானில் அமைந்துள்ள பயங்கரவாதக் கட்டமைப்பானது ஒட்டுமொத்த நாகரீக சமூகத்தின் அமைதி, வாழ்வு, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாகும்.
தற்போது சர்வதேச நாடுகள் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனால் அது போதாது. இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்குத் தண்டனை கொடுத்தால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த பயங்கரவாதத்தையும் வேரறுக்க வேண்டும் என்று பிரணாப் கூறினார்.