சத்தீஷ்கரில் 11 அமைச்சர்கள் பதவியேற்பு

திங்கள், 22 டிசம்பர் 2008 (15:12 IST)
சத்தீஷ்கர் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த 11 பேர் இன்று அம்மாநில அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

முதல்வர் ராமன் சிங் தலைமையின் கீழ் பணியாற்ற உள்ள அமைச்சர்களுக்கு, அம்மாநில ஆளுநர் ஈஎஸ்எல் நரசிம்மன் ரகசியக் காப்புப் பிரமாணமும், பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.

ராய்ப்பூர் காவலர் பயிற்சி மைதானத்தில் இன்று காலை நடந்த இந்நிகழ்சிக்கு 15 ஆயிரம் பா.ஜ.க. தொண்டர்கள் வருகை தந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்கிராம் கன்வர், பிரிஜ்மோகன் அகர்வால், ராம்விசார் நீதம், புன்னுராம் மொஹைல், சந்திரசேகர் சாஹு, அமர் அகர்வால், ஹேம்சந்த் யாதவ், விக்ரம் உசெந்தி, ராஜேஷ் முன்நாட், கேதர் காஷ்யப், லதா உசெந்தி ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 3 அமைச்சர்கள் மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள பஸ்டார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களில் 7 பேர், முந்தைய பா.ஜ.க அமைச்சரவையிலும் அமைச்சர்களாக இருந்தனர்.

சத்தீஷ்கர் சட்டப்பேரவை அதிகபட்சம் 13 அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்