120 நாடுகளின் இந்தியத் தூதர்கள் கூட்டம்!

திங்கள், 22 டிசம்பர் 2008 (12:18 IST)
மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து எழுந்துள்ள சூழ்நிலையில் இந்தியாவின் அயலுறவு கொள்கை முன்னெடுப்புகள் குறித்து ஆராய 120 நாடுகளின் இந்தியத் தூதர்களின் கூட்டத்தை அயலுறவு அமைச்சர் இன்று கூட்டியுள்ளார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலிற்கு காரணமான பயங்கரவாத அமைப்புகள் மீதும், சதித் திட்டம் தீட்டியவர்கள் மீதும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டிவரும் நிலையில், இந்தியா அந்நாட்டின் பயங்கரவாத இலக்குகளின் மீது தாக்குதல்கள் நடத்தலாம் என்று கூறப்படும் நிலையில் இந்தியத் தூதர்களின் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது நெருக்கடி கொடுக்க மத்திய அரசு உலகளாவிய அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முடிக்கிவிட்டுள்ளது. எனவே பயங்கரவாதம் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய பிரச்சனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தை துவக்கி வைத்து அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். இந்த உரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்